காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுவை கடைகளுக்குச் சென்று வாங்கி கொள்ளலாம்.
ஹைலைட்ஸ்
- இந்த மாதத் தொடக்கத்தில் மதுக் கடைகளைத் திறக்க அனுமதியளித்தது மத்திய அரசு
- தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன
- கேரளத்தில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன மதுக் கடைகள்
Thiruvananthapuram: கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. வெகு நாட்களுக்குப் பின்னர் மதுக் கடைகள் திறக்கப்படுவதால், மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நிற்க நேரிடும் என்று அஞ்சிய கேரள அரசு, நெருக்கடியை சமாளிக்க BevQ என்னும் அதிகாரப்பூர்வ செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். வீட்டிற்கு வந்து மதுபானங்களை டெலிவரி செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள கேரள அரசு, QR கோட் பயன்படுத்தி மதுபானங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. ஒரு மதுபானக் கடைக்கு வெளியே வெறும் 5 பேர் மட்டுமே நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்களை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
BevQ செயலி மூலம் ஒருவர் அருகில் உள்ள மதுபானக் கடையில், தான் வரும் நேரத்தைப் பதிவு செய்தால், QR கோட், டோக்கன் எண், எந்த நேரத்தில் வர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும்.
ஃபாரிகோட் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் இல்லை என்றால், எஸ்எம்எஸ் மூலம் இந்த சேவையைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் மதுபானக் கடைகள் மட்டுமல்ல, பார்கள் மற்றும் ஒயின் மற்றும் பீர் பார்லர்கள் கூட மதுபானங்களை விற்கலாம். ஆனால், மதுவை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதியுண்டு.
காலை 6 மணி முதல் 10 மணி வரை செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுவை கடைகளுக்குச் சென்று வாங்கி கொள்ளலாம்.
இது குறித்து கேரள சுங்கத் துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன், “ஒரு நாள் நீங்கள் மதுபானங்களை முன்பதிவு செய்துவிட்டால், அடுத்த 4 நாட்களுக்கு உங்களால் ஆர்டர் செய்ய முடியாது. QR கோட் வராதவர்கள் கடைக்கு வெளியே வந்து நிற்கக் கூடாது,” என்று கூறினார்.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் இந்த மாதத் தொடக்கத்தில் திறக்கப்பட்டன. மதுக் கடைகள் வெகு நாள் கழித்துத் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதிய சம்பவங்கள் நடந்தன.