டேபிள் டாப் ஓடுதளத்தில் கன மழை காரணமாக விமானம் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது.
ஹைலைட்ஸ்
- சப் இன்ஸ்பெக்டர் அஜித் 7:40க்கு முதல் வாக்கி-டாக்கி செய்தியை அனுப்பினார்
- 7:42 மணிக்கு, விமான நிலைய தீயணைப்பு நிலையம் எச்சரிக்கப்பட்டது.
- 7:41 மணிக்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அழைப்பு விடுத்தது
Kozhikode: வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. சர்வதேச நாடுகளில் கொரோனா முழு முடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டு கொண்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயிலிருந்து 190 பயணிகளை ஏற்றிக்கொண்டு IX-1344 போயிங் 737 விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கியது. கனமழை காரணமாக விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்நிலையில் நாட்டின் விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) ஆதாரங்களில் இருந்து விபத்தின் முதல் ஐந்து நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை என்டிடிவி அறிந்துகொள்ள விரும்பியது.
கோழிகோட்டில் விபத்தில் சிக்கிய விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.
இரவு 7:40 மணியளவில் துபாயில் இருந்து புறப்பட்டு கோழிக்கோட்டில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம் 190 பேருடன் பலத்த மழையின் காரணமாக டேபிள் டாப் ஓடுபாதையிலிருந்து விலகி பள்ளத்தில் சரிந்தது. டேபிள் டாப் ஓடுதளம் என்பது நீளம் குறைவான குன்று அல்லது மலை பிரதேசங்களில் அமைந்துள்ள ஓடுதளமாகும். இந்த விபத்து நடந்தவுடன் முதல் அழைப்பு சிஐஎஸ்எஃப் அதிகாரியால் செய்யப்பட்டது.
விபத்து கேட் எண் 08 இல் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் அஜித் சிங், விமானம் கீழே இறங்குவதைப் பார்த்த சில நொடிகளில், இரவு 7:40 மணிக்கு முதல் வாக்கி-டாக்கி செய்தியை சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இரவு 7:41 மணிக்கு, சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டு அறை விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சிஐஎஸ்எஃப் விரைவு மறுமொழி குழுவிற்கு அழைப்பு விடுத்தது.
இரவு 7:42 மணிக்கு, விமான நிலைய தீயணைப்பு நிலையம் எச்சரிக்கப்பட்டது.
இரவு 7:43 மணிக்கு, சி.ஐ.எஸ்.எஃப் விமான நிலைய சுகாதாரத் துறையை அழைத்தது.
இரவு 7:44 மணிக்கு, சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டு அறை விமான நிலையத்தின் முனைய மேலாளர், விமான நிலைய இயக்குநரைத் தொடர்புகொண்டு விமான நிலைய சுகாதாரத்திற்கு இரண்டாவது அழைப்பு விடுத்தது.
இரவு 7:45 மணிக்கு, சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டு அறை உள்ளூர் போலீசாருக்கும் ஏஜென்சியின் யூனிட் கோடுகளுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறது.
விபத்து நடந்த ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள், அப்பகுதியில் வசிப்பவர்களும் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்றுள்ளனர்.
விபத்தில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை காரணமாக விமான நிலையத்தின் துணைத் தளபதி விபத்து நடந்த பகுதியில் உள்ளூர் மக்களை மீட்புக்கு உதவ அனுமதித்தார். இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று சிஐஎஸ்எஃப் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மிக மோசமான பயணிகள் விமான விபத்தாகும். இதற்கு முன்னர் இதே போல மங்களூரு டேபிள் டாப் விமான ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டு 158 பேர் உயிரிழந்திருந்தனர்.
கோழிக்கோட்டில் நடந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் பிழைத்த அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் COVID-19 க்கும் பரிசோதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சனிக்கிழமை விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.