கன்னியாஸ்திரி பலாத்கார (Kerala Nun Rape) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிராங்கோ முலக்கால் (Bishop Franco Mulakkal)
Kochi/Thiruvananthapuram: கன்னியாஸ்திரி பலாத்கார (Kerala Nun Rape) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரோமன் கத்தோலிக் பாதிரியார் பிஷப் பிராங்கோவிடம் (Bishop Franco Mulakkal) தொடர்ந்து 3-வது நாளாக கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கேரள அமைச்சர் இ.பி. ஜெயராஜன் அளித்த பேட்டியில், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கேரள அரசு உள்ளது. குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக பிராங்கோவுக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசபிமானியில், கன்னியாஸ்திரிகளின் போராட்டம் அரசுக்கு எதிரானது என்பது போன்ற தோற்றத்தை சில சக்திகள் ஏற்படுத்தி வருகின்றன. தவறான சக்திகளின் தூண்டுதலின்பேரில் இந்த போராட்டங்கள் நடக்கின்றன. வகுப்புவாத சக்திகளை அடையாளம் காண வேண்டும். ஒரு பிஷப் தவறு செய்தார் என்பதற்காக மற்றவர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.
பாலகிருஷ்ணனின் கருத்துக்கு கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஃபிரான்சிஸ் அகஸ்டின் கூறுகையில், பிஷப்புக்கு எதிராக சர்ச் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவருக்காக பாலகிருஷ்ணன் ஏன் பேசுகிறார். அவரது கருத்துகள் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கே, கடந்த வியாழன் அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீதான விசாரணை வெள்ளிக்கிழமையான இன்று முழுமை பெறும் என விசாரணை நடத்தி வரும் கோட்டயம் எஸ்.பி. ஹரி சங்கர் கூறியுள்ளார்.
வியாழன் அன்று பிஷப்பிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.