Thrissur: கேரள மாநிலம் திரிசூரில் நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கு நிகழ்ச்சியில் குண்டு வைக்கப்போவதாக மிரட்டிய கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று நாள் பயணமாக நேற்று கேரளா சென்றுள்ள குடியரசு தலைவர், நாளை திரிசூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் குண்டு வைக்கப் போவதாக, நேற்று நள்ளிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக காவல் துறையினர், அந்த நபரை தேடி பிடித்தனர். மொபைல் எண்ணை வைத்து முகவரியை கண்டு பிடித்துச் சென்றபோது, அந்த நபர் பெயர் ஜெயராமன் எனத் தெரிய வந்துள்ளது.
தான் குடி போதை அதிகமானதால், தெரியாமல் செய்துவிட்டதாக ஜெயராமன் கூறியுள்ளார். அவர் திரிசூரின் சிரக்கல் பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜெயராமன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக, குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் தனது சுற்றுப் பயணத்தில், இன்று கேரள சட்டமன்றத்தின் வைர விழா நிறைவை கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றை துவக்கி வைக்கிறார். நாளை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகளுடன் காலை உணவு விருந்தில் கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 8-ம் தேதி, டெல்லி செல்லும் முன் குருவாயூர் ஶ்ரீ கிருஷணர் கோயிலுக்கும் செல்கிறார்.