மாநில அரசிடமிருந்து நல உதவிகளை பெற்றுத் தருவதாக ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
Wayanad: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களை நேரில் சந்தித்து, நல உதவிகளை ராகுல் காந்தி வழங்கினார். சமீபத்தில் பெய்த கனமழையால் வயநாடு தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சொந்த தொகுதியில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். வயநாட்டில் சுங்கம் மற்றும் வலாத் பகுதியில் வெள்ள பாதிப்பு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இன்று சென்ற ராகுல் காந்தி நிவாரண பொருட்களை வழங்கினார்.
அவரிடம் முறையிட்டவர்கள் தங்களது வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் மாநில அரசு அறிவித்த ரூ. 10 ஆயிரம் தொகை தங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த ராகுல், மாநில அரசின் உதவியை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
ராகுல் காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உடன் சென்றார். ராகுலுக்கு, மக்கள் பேசியவற்றை வேணுகோபால் மொழி பெயர்த்தார்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் வடக்கு மாவட்டங்களான வயநாடு மற்றும் மலப்புரம் ஆகியவற்றில் நிலச்சரிவு, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறைந்த 125 பேராவது உயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.