கேரளாவில் வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 நபர்கள் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Thiruvananthapuram: சர்வதேச அளவில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிய குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்கிற நிலையில், இதனைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் கேரளாவில் கொரோனா தொற்றுக்கு 69 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சியைச் சேர்ந்த இவர் முன்னதாக துபாய் மற்றும் அரசு நாடுகளிலிருந்து வந்திருந்தார். மேலும், இவர் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபராவார். கேரளா வந்த பின்னர் ஏற்பட்ட நிமோனியா மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மார்ச் 22 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த நபரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளான் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் 176 கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிற நிலையில் இதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்க நடவடிக்கை அமலில் இருக்கும் நிலையில், நிலைமையை சமாளிக்க அம்மாநில முதல்வர் 20 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். மேலும், மாநில மக்களுக்கு நிவாரணம் மற்றும் பொருளாதாரத்திற்கான ஆதரவு தொகுப்பு ஆகியவற்றோடு சேர்த்து இலவச ரேசன் பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். கேரளாவில் இடதுசாரி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது மக்கள் சமூக விலகியிருத்தலைக் கடைப்பிடிக்காவிட்டால் நாடு 21 ஆண்டுகள் பின்னோக்கிய நிலைமைக்கு சென்றுவிடும் என்று பிரதமர் 21 நாட்கள் முடக்க நடவடிக்கையை அறிவித்தபோது குறிப்பிட்டிருந்தார்.