This Article is From Aug 17, 2018

கேரளத்தில் பேய்மழை, நெருக்கடியில் கேரளா என்று முதல்வர் கவலை

மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கேரள முதல்வர், மாநிலம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கவலை.

கேரளத்தில் பேய்மழை, நெருக்கடியில் கேரளா என்று முதல்வர் கவலை
Kochi:

கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழன் அளவில் 86ஐ எட்டியுள்ளது. மேலும் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டு மாடிகளில் தவித்தபடி நின்ற பலரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மாநிலத்திலுள்ள அணைகள் அனைத்தும் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக நிரம்பிவிட்டதால் அவற்றில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், “கேரளம் கடும் நெருக்கடியான நிலையில் உள்ளது” என்று அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் முக்கிய விமான நிலையமான ஆகஸ்ட் 26 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகிய கடற்கரைகள், கழிமுகங்கள், தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய மாநிலமான கேரளத்தில் ஆண்டுதோறும் பருவமழையின்போது சில பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இவ்வருடம் ஏற்பட்டுள்ள சேதம் கடந்த நூறாண்டுகளில் அம்மாநிலம் சந்தித்திராதது ஆகும்.

வியாழன் அன்று மேலும் 21 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் நென்மாறாவில் பாசன அணைக்கட்டு உடைந்ததில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் சிக்கியதால் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

“எண்பது அணைகள் அபாய நிலையை எட்டியுள்ளன. வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்” என்று முதல்வர் பிணராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராணுவத்தினர், கடற்படை ஹெலிகாப்டர்கள், உயிர்காக்கும் படகுகள், நீச்சல் வீரர்கள் என பல படைகளும் கேரளத்தில் மீட்புப் பணிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன. கூடுதலாக 540 அணிகள் வியாழன் அன்று மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மேலும் படைகள் வரலாம் என்று தெரிகிறது.

ஹெலிகாப்டர்கள் மூலம் எராளமானோரை மீட்டு வருவதாகக் கூறிய இராணுவத்தினர், மேலே இருந்து மக்களுக்கு உணவு, தண்ணீர் பொட்டலங்களை வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியினை எளிதாக்க, திறந்தவெளிகளிலோ அருகில் மரங்கள் இல்லாத வீட்டு மாடிகளிலோ நிற்குமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 

5ii96uto

60,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கேரளத்தின் பல பகுதிகளிலும் 6500 க்கும் மேற்பட்டோர் இக்கட்டில் சிக்கியுள்ளனர்.

கேரளாவில் பத்தாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் சேதமடைந்தும் முற்றிலும் அழிந்தும் உள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளும் அழிந்துள்ளன. கார்கள், கால்நடைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்படும் காட்சிகளும் மார்பளவு நீரில் மக்கள் தத்தளித்தபடிச் செல்வதும் டிவியில் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

வீட்டுமாடிகளில் சிக்கியுள்ள பலரும் சமூக வலைதளங்களில் வீடியோவுடன் உதவி கோரி வருகின்றனர். கோவில் ஒன்றின் மூன்றாம் தளத்தில் போன் பேட்டரி தீர்ந்து போகும் நிலையில் உதவி கோரிய ஒரு பெண்ணின் முகநூல் பதிவை கேரள எம்.பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “என்னோடு சேர்ந்து 36க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் இங்கு சிக்கியுள்ளோம். போன் பேட்டரிகள் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. சிக்னல் எப்போது போகும் என்று தெரியவில்லை. எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று அப்பதிவில் தேவி ஸ்ரீகுமார் என்பவர் கோரியுள்ளார். இதேபோல பத்தணம்திட்டா மாவட்டத்தில் வீட்டு மாடியில் சிக்கியுள்ள எட்டு மாத கர்ப்பிணி உள்ளிட்ட தனது உறவினர்களைக் காப்பாற்றுமாறு மற்றுமொருவர் ட்விட்டரில் உதவி கோரி இருந்தார்.

mha8ubd

கேரளத்தின் வடக்கு, மத்திய பகுதிகளே மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றபோதிலும் மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதையடுத்து மாநிலம் முழுவதுமே ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உஷார் நிலையில் உள்ளது.

வியாழன் அன்று ட்விட்டரில் பிரதமர் மோடி, “நிவாரண, மீட்பு பணிகளை மேலும்  முடுக்கிவிடுமாறு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். கேரள மக்களின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

.