Idukki: கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை கன மழை காரணமாக 29 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. ராணுவப் படை, கடற்படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை என பல பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடுக்கி அணைக்கு மூன்றாவது ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகள் கழித்து அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு உதவி செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளேன்’ என்று கூறினார். மாநிலம் முழுவதும் 500 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 15,600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 12 ஆம் தேதி கேரளா சென்று, வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
10 ஃபேக்ட்ஸ்.
மூணாரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் 69 பேர் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், அங்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இடுக்கி அணையில் நீரின் அளவு முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, அதன் 5 மதகிலிருந்தும் நீர் திறந்துவிடப்பட்டது.
மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசியுள்ளார். அப்போது, மீட்பு நடவடிக்கைளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், ‘கடந்த 50 ஆண்டுகளில் இதைப் போன்ற மழை கேரளாவில் பெய்ததில்லை’ என்று கூறியுள்ளார்.
பெரியாறு ஆற்றின் கரையோரமாக இருக்கும் 200 குடும்பங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை மழை காரணமாக 29 பேர் இறந்துள்ளனர். இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக மட்டும் 11 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவப் படை, கடல்படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், பத்தணம்திட்டா மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர் திரிச்சூர் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளை இன்று புகும் என்று கூறப்பட்டுள்ளதால், அங்கிருக்கும் அரசு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் மழை காரணமாக கடந்த சில வாரங்களில் மட்டும் 24 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
கொச்சி விமான நிலையத்தில் வெள்ள நீர் புகும் என்ற அச்சத்தால், 2 மணி நேரம் விமானங்கள் தரை இறங்குவது நிறுத்திவைக்கப்பட்டது.