This Article is From Jun 16, 2020

வங்கியில் கண்ணாடி கதவு மூடியிருப்பதை அறியாமல் ஓடிச்சென்று மோதிய பெண் உயிரிழப்பு!!

இந்த விபத்தில், கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறியதோடு பீனா பவுல் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு, இரத்தம் கொட்டியது. வயிற்றிலும் கண்ணாடி சிதறல்கள் குத்திக் கிழித்து இரத்த காயத்தை ஏற்படுத்தின. அவரது உடலின் உள்பகுதியிலும் காயம் ஏற்பட்டது. 

வங்கியில் கண்ணாடி கதவு மூடியிருப்பதை அறியாமல் ஓடிச்சென்று மோதிய பெண் உயிரிழப்பு!!

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஹைலைட்ஸ்

  • கேரள மாநிலத்தில் 40 வயது பெண் கண்ணாடி கதவில் மோதி உயிரிழந்தார்
  • வங்கிக்கு சென்றபோது, காரில் பொருளை எடுக்க ஓடி வந்ததால் விபரீதம்
  • கண்ணாடி கதவு மூடப்பட்டிருப்பதை உணராமல் கதவுமீது பலமாக மோதினார்
Ernakulam:

கேரளாவில் வங்கி ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு கண்ணாடி கதவு மூடப்பட்டிருப்பதை உணராமல் வேகமாக  ஓடி வந்துள்ளார். இதில் அவர் கண்ணாடி கதவின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் பீனா பவுல். 40 வயதான இந்த பெண்மணி பெரும்பாவூரில் உள்ள வங்கி ஒன்றுக்கு நேற்று சென்றுள்ளார். வங்கிக்குள் இருந்த  அவர், காரில் ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக வேகமாக ஓடி வந்திருக்கிறார்.

அந்த வங்கியில் கண்ணாடி கதவு போடப்பட்டிருப்பதையும், அது மூடி வைக்கப்பட்டிருப்பதையும் பீனா பவுல் உணரவில்லை.  இந்த நிலையில், வேகமாக வந்த அவர், கண்ணாடி கதவில் மோதினார்.

இந்த விபத்தில், கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறியதோடு பீனா பவுல் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு, இரத்தம் கொட்டியது. வயிற்றிலும் கண்ணாடி சிதறல்கள் குத்திக் கிழித்து இரத்த காயத்தை ஏற்படுத்தின. அவரது உடலின் உள்பகுதியிலும் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பீனா பவுலை ஒரு சேரில் உட்கார வைத்தனர். இருப்பினும், இவ்வளவு சீரியஸான விஷயத்தை வங்கியில் இருந்த பணியாளர்கள் முதலில் உணரவில்லை. 

சில நிமிடங்களுக்கு பின்னர் நிலைமையை அறிந்த வங்கி பணியாளர்கள், பீனா பவுலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவியில்  வெளியாகி பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது. 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

.