This Article is From Jul 27, 2018

மீன் விற்கும் கேரள மாணவியை கிண்டல் செய்த நெட்டிசன்கள்… கொதித்தெழுந்த அமைச்சர்!

கேரள பெண்கள் கமிஷன் தலைவர் ஜோஸபின், ஹனனை நேரில் சென்று பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

மீன் விற்கும் கேரள மாணவியை கிண்டல் செய்த நெட்டிசன்கள்… கொதித்தெழுந்த அமைச்சர்!
Kochi:

கேரளவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பகுதி நேரமாக மீன் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இது குறித்து சில நெட்டிசன்கள் கிண்டல் செய்யவே மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் அதை வன்மையாக கண்டித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த 21 வயது மாணவியான ஹனன், இளங்களைப் பட்டம் பயின்று வருகிறார். அவர் பகுதி நேரமாக மீன் விற்று தன் அன்றாட செலவை சமாளித்து வருகிறார். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் பிரபல நாளிதழான ‘மாத்ருபூமி’-யில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரை பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனால் ஹனன் குறித்து நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். பலர் ஹனனின் வாழ்க்கை குறித்தும் அவருக்கு வாழ்த்துகள் கூறியும் பதிவுகள் இட்டு வந்தனர். ஆனால், சில நெட்டிசன்கள் அவரது கதை பொய்யென்று வரு வதந்தியை பரப்பிவிட்டனர்.

இந்த வதந்தியை அடுத்து ஹனன் படிக்கும் கல்லூரி தலைமை ஆசிரியரும் அவருக்குத் தெரிந்தவர்களும், ஹனன் கதை உண்மையானது தான் என்று ஆதரவுக்கரம் நீட்டினர். 

இதையடுத்து மத்திய அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ், தனது முகநூல் பக்கத்தில், ‘ஹனனை இப்படி தூற்றுவதை நிறுத்துங்கள். நான் வெட்கி தலைக் குனிகிறேன். தனது கடினமான வாழ்க்கைக்கு எதிராக போராடி வரும் பெண் அவர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது இளமைக் காலங்களில் இதைப் போலத்தான் பல தடைகளை சந்தித்தார். ஆனாலும், அவர் அனைத்துத் தடைகளையும் உடைத்து நாட்டின் பிரதமராக ஆனார்’ என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஹனன், ‘எனக்கு உங்களின் எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார் கதறலுடன்.

கேரள பெண்கள் கமிஷன் தலைவர் ஜோஸபின், ஹனனை நேரில் சென்று பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 

.