ஹைலைட்ஸ்
- காய்கறிகளில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது.
- மலச்சிக்கலை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- உடற்பயிற்சி செய்வதாலும் மலச்சிக்கல் நீங்குகிறது.
உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளே பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பக்க விளைவாக மலச்சிக்கல் பிரச்னை தானாகவே வந்துவிடுகிறது. மலச்சிக்கல் பிரச்னை வருவதற்கு முக்கிய காரணம் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை தவிர்ப்பதுவே. இது ஒருபுறமிருக்க, கீடோ டயட்டை பின்பற்றினால் வயிற்றுபோக்கு ஏற்படும். கொழுப்பு நிறைந்த உணவுகளை செரிக்க வைப்பதற்காக உடல் நிறைய என்சைம்களை சுரக்கும். அதன் விளைவாக வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. சிறுகுடலால் இந்த கொழுப்பை உடைக்க முடியாதபோது, அது குடல் வழியாக வரும்போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் தூண்டப்பட்டு வாயு தொல்லை, வயிறு உப்புசம் ஆகிய பிரச்னைகள் உருவெடுக்கும். ஆகவே, கீடோ டயட்டில் இருக்கும்போது மலச்சிக்கலை தவிர்க்க சில வழிகள் உண்டு. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
தண்ணீர்:
உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் சுலபமாக வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது உடல் உறுப்புகளை புத்துணர்ச்சியடைய செய்வதோடு, நச்சுக்களையும் அகற்றுகிறது.
காய்கறிகள்:
காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து விடுபடலாம். கீடோ டயட்டில் இருப்பவர்கள் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிட தவறிவிடுவார்கள். சில காய்கறிகளில் குறைந்தளவு கார்போஹைட்ரேட்டும் அதிகபடியான நார்ச்சத்தும் நிறைந்திருக்கும். லீட்யூஸ், அஸ்பராகஸ், மஷ்ரூம், எக் ப்ளான்ட், முள்ளங்கி, குடைமிளகாய் மற்றும் சூச்சினி ஆகியவற்றில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. தினசரி இவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
ப்ரோபையோடிக்ஸ்:
யோகர்ட், கெஃபிர், கிம்சி, கொம்புச்சா போன்றவற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது. இந்த ஹெல்தி ப்ரோபையோடிக்ஸை தினசரி சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு. ஆனால் நாள் முழுவதும் உங்களை ஹெல்தியாக வைத்திருக்கும்.
உடற்பயிற்சி:
நீங்கள் எந்த டயட்டை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்து கொள்வது அவசியம். உடற்பயிற்சி செய்வதால் சரியான நேரத்திற்கு பசி எடுக்கும். ஏரோபிக் உடற்பயிற்சியான நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் ஸூம்பா போன்றவை தொடர்ச்சியாக செய்யும்போது மலச்சிக்கல் ஏற்படாது.
சியா மற்றும் ஃப்ளக்ஸ் சீட்:
சியா விதை மற்றும் ஆளி விதையில் மலச்சிக்கலை போக்கக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. சியா விதையை தண்ணீரில் போட்டால் ஜெல் போன்று மாறிவிடும். இது மலத்தை இலகுவாக்கிவிடும். சியா விதை தன் எடையை பொருத்து அதேபோல் 12 மடங்கு தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.
ஆளி விதையில் செரிமானத்தை அதிகரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைய இருக்கிறது. பெருங்குடலின் ஆரோக்கியத்திற்கு ஆளி விதையை சாப்பிடலாம். மலத்தை இலகுவாக்கி மலச்சிக்கலை போக்குகிறது.