This Article is From Feb 11, 2019

முக்கிய நிபந்தனைகளை கைவிட்டதா மத்திய அரசு?- ரஃபேல் ஒப்பந்த புதிய தகவலால் பரபரப்பு

பாஜக தரப்பு, ‘காங்கிரஸ் மற்றும் இந்து ஆங்கில நாளிதழ் கூட்டாக சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக சதி செய்து வருகிறது’ என்று மட்டும் விளக்கம் அளித்துள்ளது.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் அமைச்சகத்தின் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தி இந்து ஆங்கில நாளிதழ்தான் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது
  • என்.ராம் செய்தி எழுதி வெளியிட்டுள்ளார்
  • 2 நாட்களுக்கு முன்னரும் இதைப் போன்ற ஒரு ஆவணத்தை இந்து வெளியிட்டது
New Delhi:

‘தி இந்து' ஆங்கில நாளிதழ், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் அமைச்சகத்தின் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், மத்திய அரசு, ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர் ஊழலுக்கு எதிராக இருந்த சில அடிப்படை நிபந்தனைகளை கைவிட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் இந்து நாளிதழ், இதே போன்றதொரு செய்தியை வெளியிட்டது. அதில், ‘ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்புக்குப் பின்னடைவு ஏற்படுத்தும்படியான நடவடிக்கையில் பிரதமர் அலுவலகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று குற்றம் சாட்டியது. அந்த செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் பத்திரிகையாளர் மத்தியில் எடுத்துக் காட்டி மத்திய அரசை சாடினர். ஆனால் இந்து நாளிதழின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, ‘மிகவும் ஒரு தலைபட்சமான செய்தியை தி இந்து வெளியிட்டுள்ளது' என்று விளக்கம் அளித்தது. 

இன்று புதிய ஆவணங்கள் வெளியிட்டு செய்தி எழுதியுள்ள இந்து பத்திரிகையின் தலைவர் என்.ராம் NDTV-யிடம் பேசியபோது, “ரஃபேல் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கடைசி நேரத்தில் செய்யப்பட்டுள்ளன. அப்படி மாற்றங்கள் செய்ய என்ன காரணம். ஊழலுக்கு எதிராக இருந்த விதிமுறைகளில் திருத்தம் செய்வதால் எப்படி இந்திய விமானப் படை பயனடையும்?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். 

செப்டம்பர் 2016-ல், மனோகர் பாரிக்கர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு இடையில் போடப்பட இருந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது கையாளப்பட்ட ஆவணங்களைத்தான் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

2013 டிஃபென்ஸ் ப்ரோக்கியூர்மென்ட் ப்ரொசிஜர்-க்கு கீழ் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அப்படி இந்திய அரசு போடும் ஒப்பந்தங்களில், அடிப்படை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படியில்லை என்பதுதான் தற்போது மத்திய அரசு மீது வைக்கப்பட்டிருக்கும் பிரதான குற்றச்சாட்டு.

இதையடுத்து 36 ரஃபேல் விமானம் வாங்க போட்ட ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘நரேந்திர மோடியே, அனில் அம்பானிக்கு கதவு திறந்துவிட்டு, இந்திய விமானப் படையிடமிருந்து 30,000 கோடி ரூபாயைத் திருட வழிவகை செய்துள்ளார்' என்று ட்வீட் செய்துள்ளார். 

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானததைத் தொடர்ந்து மத்திய அரசை சரமாரியாக கேள்வி கேட்டு வருகிறார்.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பாஜக தரப்பு, ‘காங்கிரஸ் மற்றும் இந்து ஆங்கில நாளிதழ் கூட்டாக சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக சதி செய்து வருகிறது' என்று மட்டும் விளக்கம் அளித்துள்ளது.

.