This Article is From Aug 21, 2019

அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உத்தரவு தொடரும்: உயர்நீதிமன்றம்

தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உத்தரவு தொடரும்: உயர்நீதிமன்றம்

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக் கூடாது என்றும், அரசின் நடவடிக்கைகளில் தலையிட சிறப்பு அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளது என்று மத்திய அரசு 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அம்மாநில எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தடை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது உள்துறை அமைச்சகம்.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அரசியல் சாசன பிரிவுகளையும், விதிகளையும் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என வாதிட்டார்.

அதேசமயம், எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாகவும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டதாகவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இதையடுத்து, மத்திய அரசின் மனு குறித்து, புதுவை எம்.எல்.ஏ.லட்சுமிநாராயணன் மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது. 
 

.