This Article is From Jul 02, 2019

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி: நாராயணசாமி தாக்கு!

எப்போதும் விளம்பரத்தில் இருக்க வேண்டும் என்கிற வியாதி கிரண்பேடிக்கு இருக்கிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி: நாராயணசாமி தாக்கு!

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து கிரண்பேடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது.

மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

கிரண்பேடியின் இந்த பேச்சுக்கு சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கிரண்பேடியின் கருத்தை கண்டித்து சட்டப்பேரவையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதால் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கிரண்பேடியின் பேச்சைக் கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தான் கூறியது மக்கள் கருத்தே என கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியில், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது எனது கருத்தல்ல. மக்களின் கருத்தையே நான் கூறினேன். எனது கருத்தில் தனிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறும்போது, எப்போதும் விளம்பரத்தில் இருக்க வேண்டும் என்கிற வியாதி கிரண்பேடிக்கு இருக்கிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார் என்று அவர் விமர்சித்துள்ளார்.

.