வாகன ஓட்டிகளை முறையாக சோதனை செய்யும்படி காவலர்களுக்கு கிரண்பேடி அறிவுறித்தினார்.
ஹைலைட்ஸ்
- சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்களுக்கு கிரண்பேடி
- ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம், ஹெல்மெட் எங்கே என்று கேள்வி எழுப்பினார்
- கிரண்பேடி நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.
Puducherry: தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் பரபரப்பாக இயங்கும் சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி எச்சரிக்கை விடுத்தார். புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் பார்வையிட்ட அவர், முதல்வர் நாராயணசாமி சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதை நிறுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் நேற்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகே போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து கிரண் பேடி வாகன சோதனையில் ஈடுபட்டார்.
இந்த சோதனையின்போது, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை கேள்வி எழுப்பிய அவர், பிற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் தடுத்து நிறுத்தினார். ஹெல்மெட் போடாமல் வருபவர்கள் மட்டுமின்றி, அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் 3 பேராக சென்றவர்களையும் கீழே இறக்கி கடுமையாக கண்டித்தார்.
இதுதொடர்பாக தான் சோதனை மேற்கொண்ட வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்த கிரண் பேடி, "புதுச்சேரியில் ஹெல்மெட் அணியும் கலாச்சாரமே இல்லை. ஒவ்வொரு முறை ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும்போதும் அதனை முதல்வரே தடுத்து விடுகிறார்.
இதனால், மூன்று நாளுக்கு ஒரு முறை ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் ஒருவர் பலியாகிறார். சட்டங்களை அமல்படுத்துவதிலிருக்கும் சவால்களுக்கு இடையேதான் இதனை நடத்த வேண்டியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் போலீசார் அனுப்பி வைத்தனர்.