This Article is From Feb 14, 2019

2வது நாளாக நீடிக்கும் முதல்வரின் போராட்டம்! - டெல்லி சென்ற கிரண்பேடி!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்

Advertisement
இந்தியா Posted by

வளர்ச்சித் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக் கட்டை போடுவதாக கூறி, புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் குதித்திருக்கிறார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் கறுப்பு சட்டை அணிந்து கிரண் பேடியின் வீட்டு முன்பாக இரவில் படுத்து உறங்கி போராட்டம் நடத்தினார்.

அவருக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக் கட்டை போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், நரேந்திர மோடியின் தூண்டுதலின்பேரில் கிரண்பேடி இந்த வேலைகளை செய்து வருகிறார். சதிக்கு மோடிதான் காரணம். ஒவ்வொரு நாளும் எங்களது அரசுக்கு கிரண் பேடி பிரச்னை அளித்து வருகிறார்'' என்று கூறினார்.

நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு கிரண்பேடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டின் முன்பாக படுத்து உறங்கும் போராட்டத்தை உங்களைப் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தலாமா என்று கிரண் பேடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Advertisement

தேசிய சாலைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சாலையில் ஹெல்மெட் இல்லாமல் சென்றவர்களை பிடித்து அவர்களிடம் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கிரண்பேடி விசாரித்தார். கட்டாய ஹெல்மெட்டை கொண்டு வர வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே பிப்ரவரி 21-ஆம் தேதி ஆலோசனைக்கு வருமாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தின் பதிலுக்கு காத்திருக்காமல், முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும், இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமது அலுவலகத்துக்கு வருமாறு நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

கிரண்பேடி எழுதியுள்ள கடிதத்தை ஏற்க முடியாது எனக்கூறி, முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தை தொடர்கிறார். மேலும், மக்கள் பிரச்னையை தீர்க்க தடையாக உள்ள ஆளுநருக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி; ஆளுநராக இருக்க கிரண் பேடி தகுதியற்றவர் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று அதிரடிப் படையினரும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். அதேசமயம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் புதுச்சேரியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

Advertisement