கேரளத்தில் மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதை அடுத்து, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், உடனடியாக உண்ணத்தக்க உணவுகளின் தேவை குறித்து மத்திய அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிளம்பர், எலக்ட்ரிசியன்கள், தச்சர்கள் போன்ற பணியாளர்களின் உதவியும் தற்போதுள்ள நிலையில் வீடுகளை வாழத்தக்கதாக சீரமைக்கவும், மக்கள் இயல்புநிலைக்கு திரும்பவும் மிகவும் அவசியமானது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதேபோல பலவற்றின் தேவை குறித்தும் அவர் ட்வீட்களைப் பதிந்துள்ளார்.
“நோய் பரவலாம் என்னும் சாத்தியம் உள்ள நிலையில் கிராமங்கள்தோறும் சென்று அதனைத் தடுக்க நமக்கு மருத்துவர்கள், செவிலியர்களின் உதவி தேவையாக உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் புதிய ஆடைகளை விநியோகிக்கலாம்.”
“பல்லாயிரம் பால் பாக்கெட்டுகளை வழங்கி உதவிய தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்கு இந்நேரத்தில் எனது நன்றி. தாமாக முன்வந்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 25கோடி அளித்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் நன்றி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல இலட்சம் மக்களைப் பாதித்த கேரள வெள்ளத்தை, மத்திய அரசு ‘தீவிர இயற்கைப் பேரிடர்’ என அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)