‘மாஸ்டர்ஸ் வேர்ல்டு மீட்’ என்று சொல்லப்படும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் ருக்மணி தேவியை, பயிற்சி எடுக்கும் இடத்திற்கே சென்று சந்தித்தோம்.
உலகில் உள்ள பெரும்பான்மையான உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில், பல ஆண்டுகள் கோலோச்சும் வீரர்கள் கூட 35, 40 வயதில் ஓய்வு அறிவித்துவிடுவார்கள். அந்த வீரர்கள் விளையாடும்போது எவ்வளவு கட்டுமஸ்தாக இருந்திருந்தாலும் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் அதீத விடுப்பினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ருக்மணி தேவி, 64 வயதிலும் தடகளப் போட்டிகளில் கலக்கி வருகிறார். அடுத்ததாக ‘மாஸ்டர்ஸ் வேர்ல்டு மீட்' என்று சொல்லப்படும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் ருக்மணி தேவியை, பயிற்சி எடுக்கும் இடத்திற்கே சென்று சந்தித்தோம்.
ஜாவ்லின் த்ரோ, ஹாம்மர் த்ரோ, லாங் ஜம்ப், ட்ரிபிள் ஜம்ப், ஓட்டப் பந்தியம் என்று பல்துறை வித்தகரான ருக்மணி, சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடையவராகத்தான் இருந்துள்ளார். “ஸ்போர்ட்ஸ்னு மட்டும் இல்ல. டான்ஸ், ஃபிட்னஸ்னு உடம்ப உற்சாகமா வச்சிருக்க எதுன்னாலும் எனக்கு டபுள் ஓகே. எனக்கு வாழ்க்கையிலேயே பிடிக்காத ஒண்ணுன்னா இண்டோர் கேம்ஸ்தான்” என்று சொல்லிக் கொண்டே ஹம்மர் த்ரோ என்னும் குண்டு எரிதலுக்குத் தயாரானார்.
தொடர்ந்து அவர் செய்யும் அனைத்துப் பயிற்சிகளையும் பார்வையிட்டுக் கொண்டே இருந்தோம். 2 மணி நேரம் கடந்திருக்கும். நமக்கு வியர்த்து விறுவிறுத்தது. அவரோ தொடர் உற்சாகத்தில் பேச்சைத் தொடர்ந்தார். “ஸ்கூல், காலேஜுன்னு எல்லா இடத்திலேயும் பல ஸ்போர்ட்ஸ்ல பங்கெடுத்துகிட்டேன். காலேஜ் படிக்கும்போதே ஆந்திர அணியை தேசிய சாம்பியன்ஷிப் வரை வழிநடத்தினேன். ஸ்போர்ஸ் கோட்டாவுல ரயில்வே வேலை கிடைச்சுது. ஆனா, உடனே கல்யாணம், குழந்தைனு குடும்பம் வந்ததால கேம்ஸ்ல ஒரு கேப் விழுந்துச்சு” என்று கதையில் ஒரு சின்ன ட்விஸ்ட் வைத்தார்.
ரயில்வே பணியில் இருந்தபடியே, வங்கித் தேர்வுகளில் வெற்றி பெற்று, துறை மாறினார். அங்கும் ஹாண்டு-பால் அணியை உருவாக்கி வங்கிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்றார். இப்படியே 49 வயதுவரை ஓடிவிட, ஏதேச்சையாக ஒரு நண்பரின் தூண்டுதலின் பெயரில் ‘சீனியர் பிரிவின்' தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது சுடிதாருடன் போட்டியில் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவர்தான். அவரே எதிர்பாராத விதமாக 2வது இடத்தைப் பிடித்தார். அந்த கணம்தான்… ருக்மணி தேவிக்கு ‘கம்-பேக்' கொடுக்க உத்வேகமூட்டியுள்ளது.
அந்தப் போட்டிக்குப் பின்னர் முறையான பயிற்சியின் மூலம், மாநில, தேசிய, ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார் ருக்மணி. அடுத்து உலக அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் ருக்மணியின் லட்சியம். களத்தில் யார் முன்னுதாரணாமக திகழ்கிறார் என்று வினவியபோது, “இந்த சீனியர் ஸ்போர்டஸுக்கு நீங்க வந்து பார்க்கணும். 80, 85 வயசுல இருக்கிறவங்கெல்லாம் எவ்ளோ ஃபிட்டா, ஆர்வத்தோட இருக்கிறாங்கன்னு. 100 வயசைத் தாண்டியும் விளையாட்றவங்க இருக்காங்க தெரியுமா..?” என்று ஆச்சரியமூட்டுகிறார்.