Mumbai: கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் இன்று முதல் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளன.
கன மழை காரணமாக கொச்சி விமான நிலையம் முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு இருந்தது. 20-ம் தேதி முதல் வர்த்தக விமானங்கள், கடற்படை தளத்தில் தரை இறக்கி பயன்படுத்தப்பட்டது.
மேலும், கொச்சி வர இருந்த விமானங்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோவைக்கு மாற்றி விடப்பட்டன. இன்று பிற்பகல் 2 மணி முதல் சேவையை தொடங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமானம், பிற்பகலில் தரையிறங்க இருக்கிறது.
வெள்ளம் காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் விமான சேவை இல்லாமல் இருந்ததால், அந்த டிக்கெட்களை செப்டம்பர் 15-ம் தேதி வரை பயண தேதியை மாற்றி அமைக்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.