This Article is From Jan 22, 2019

‘கொடநாடா.. கொலைநாடா..?'- முதல்வர் பதவி விலக திமுக அதிரடி அறிவிப்பு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்துப்பட்டு வருகின்றது.

Advertisement
தமிழ்நாடு Posted by

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்துப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவர் மீது அழுத்தத்தை அதிகரிக்க திமுக அடுத்தக்கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. 3 பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பியுள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்காள்ளாகின்றனர். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார்.

Advertisement

இப்பிரச்னை குறித்து நான், கடந்த 14-1-19 அன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ‘பத்திரிகையாளர் மாத்யூ வெளியிட்ட கொடநாடு நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் - நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக்குவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், இன்று வரை அக்கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, முதலமைச்சர் எடப்பாடி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் - நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்க்குவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வருகின்ற 24-1-19 அன்று காலை 10 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement