கொடநாடு விவகாரத்தில் முதல்வர் தவறு செய்யவில்லை என்றால் எதற்கு பதற வேண்டும்? என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
இதையடுத்து, கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்.பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்று கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தி, பின்னர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம் நீதிபதி, என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு காவல்துறையினர் அளித்த பதிலும், உரிய ஆதாரங்களும் போதுமானதாக இல்லை எனவும் சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது? என சரமாரி கேள்வி எழுப்பினார். மேலும் சயான், மனோஜை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முதலமைச்சர் மீதே கொலை, கொள்ளை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முதலமைச்சர் உண்மையிலே தவறு செய்யவில்லை என்றால் எதற்காக இப்படி பதற வேண்டும்? டெல்லி சென்று எதற்கு அவர்கள் இருவரையும் அவரசம் அவசரமாக கைது செய்ய வேண்டும்?
நீதிமன்றம் அவர்களை சிறையில் அடைக்க மறுத்துவிட்டது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏதோ ஒரு பதற்றம் தெரிகிறது. காவல்துறை முந்திகொண்டு பேட்டி அளிக்கிறது. இவை அனைத்தும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை இவர்கள் விசாரிக்க மாட்டார்கள். இதனை விசாரிக்க காலம் வரும். அப்போது இது உரிய முறையில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.