தெஹெல்கா இதழின் முன்னாள் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தமாக ஒரு ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பங்களுக்கு அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தமிழக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிய நிலையில், திமுக-வின் மூத்த நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்தித்துள்ளனர்.
திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராஜா, மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராஜா பேசுகையில், “ஜெயலலிதாவுக்கு டிரைவராக இருந்தவர் கோடநாடு எஸ்டேட்டில் இரவு நேரத்தில் கொள்ளை அடிப்பதற்காகச் சென்றிருக்கிறார். அதையடுத்து எல்லாம் மர்மம்தான். அடுத்தடுத்து எஸ்டேட்டில் கொலை சம்பவங்கள் நடந்தன.
சொத்துக் குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்ட முதன்மை சொத்து அந்த பங்களா. அது ஒரு கேம்ப் ஆபீஸ். தலைமைச் செயலகத்திலிருந்து என்னப் பணி ஆற்றினாரோ அதே பணியை அங்கு ஆற்றினார் ஜெயலலிதா. அது குறித்தும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், திருட்டு சம்பவம் நடந்த அன்று ஒரு போலீஸ் கூட கோடநாடு பங்களாவில் இல்லை. மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு இடத்தில் ஏன் காவலர்கள் இல்லை. அதேபோல, 27 சிசிடிவி கேமராக்கள் அங்கு உள்ளன. ஆனால், சம்பவம் நடந்த அன்று ஒரு கேமரா கூட எப்படி வேலை செய்யவில்லை. அந்த பங்களாவுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் போகும் வசதி உள்ளது.
ஜெயலலிதா இறப்பு, சசிகலாவின் சிறைவாசம், ஓபிஎஸ் பதவி விலகல், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றது என்ன ஏல்லாத்தையும் கோர்த்துப் பார்த்தால் பல சந்தேகங்கள் எழுகின்றன.
120பி-ப்படி இந்த விவகாரத்தில், ஆவணப்பட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது முதல் குற்றவாளி முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த விசாரணையை சையனிடமிருந்து தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து நம்பர் ஒன் குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமியை பெயரிட வேண்டும். நீதி வெல்ல வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். அதுவே திமுக-வின் நிலைப்பாடு.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் கீழ்தான் தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது. பிறகு எப்படி அந்த காவல் துறை அவருக்கு எதிராக செயல்படும். ஆகவேதான் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.