This Article is From Apr 04, 2019

கொடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

கொடநாடு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்கில் ஸ்டாலின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் தமிழக அரசையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும் பேசி வந்தார்.

இந்த கொடநாடு எஸ்டேட் வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டி வந்தார். தமிழக அரசு ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தது. அதில், மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்கவும் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், ஸ்டாலின் தொடர்ந்து கொடநாடு விவகாரம் தொடர்பாக தேர்தல் பிரசாரங்களில் பேசி வந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டங்களை தெரிவித்துள்ளது. கொடநாடு விவகாரம் குறித்து தொடர்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி ஸ்டாலின் கொடநாடு குறித்து பேசுவது ஏன்?.

கொள்ளை வழக்கில் முதல்வரை தொடர்பு படுத்தி தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். விசாரணைக்கு இடைக்கால தடை பெற்றுள்ள ஸ்டாலின், தொடர்ந்து பேசுவது ஏன்?

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஸ்டாலின் பேச விரும்பினால் அவர் வழக்கு விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என நீதிமன்றம் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

.