இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்: 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் வைத்த கொடுமை!
Kolkata: கொல்கத்தாவில் வீட்டில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், 2 நாட்களாக உடலை ஐஸ்கிரீம் ப்ரீசரில் வைக்க வேண்டிய நிலைக்கு அந்த குடும்பத்தினர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். உதவியற்ற நிலையில் சுமார் 48 மணி நேர தவிப்புக்கு பின்னர் குடிமை அதிகாரிகளால் அந்த உடல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டிலே முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் இறப்பு சான்றிதழ் தர முடியாது என மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மயானத்தில் அடக்கம் செய்வதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் சுகாதாரத்துறை, குடிமை அதிகாரிகள், காவல்துறை, அரசியல்வாதிகள் என அனைவரின் உதவியையும் நாடியுள்ளனர். எனினும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று காலையில் உடல் அழுகிவிடாமல் இருக்க ஐஸ்கிரீம் ப்ரீசர் ஒன்றை வாங்கி அதில், உடலை வைத்துள்ளனர். தொடர்ந்து, அன்று மாலை உயிரிழந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
இதையடுத்து, அந்த முதியவர் உயிரிழந்து 48 மணி நேரத்திற்கு பின்னர், நேற்று பிற்பகல் 2 மணி அளவில், குடிமை அதிகாரிகள் அந்த உடலை அகற்றிச்சென்றுள்ளனர். அவர் உயிரிழந்த 50 மணி நேரத்திற்கு பின்னர் அந்த கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
அந்த முதியவர் மூச்சுத் திணறல் காரணமாக திங்களன்று மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் வீடு திரும்பியபோது அவரது உடல்நிலை மோசமடைந்தது, வீட்டிலே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை அணிந்த படி அந்த முதியவரின் குடியிருப்புக்கு வந்து மருத்துவர் பார்வையிட்டுள்ளார். எனினும், அவர் இறப்புச் சான்றிதழ் வழங்க மறுத்து, இது ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதால் உள்ளூர் போலீஸை தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் போலீசாரிலிருந்து, அரசியல்வாதிகள் வரை பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு முயற்சித்துள்ளது. யாரிடம் இருந்தும் உரிய பதில் வரவில்லை. போலீசாரை கேட்டபோது, உள்ளூர் கவுன்சிலரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறும்போது, "நாங்கள் சுகாதாரத் துறையை அழைத்தபோது அதில், ஒரு நபர் எங்களுக்கு வழங்கிய ஹெல்ப்லைனுக்கு நாங்கள் பல அழைப்புகளைச் செய்தோம், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை" என்றார்.
இதையடுத்து, உடலை வைப்பதற்கு சவக்கிடங்குக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், அவர்களும் இறப்பு சூழ்நிலையைக் கேட்டு உதவுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால், தான் ப்ரீசரில் சடலத்தை வைத்தோம் என்கிறார்.
தொடர்ந்து, சோதனை முடிவுகள் வந்த பின்பு சுகாதாரத்துறைக்கு அழைத்தும், அவர்கள் பெரிதாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னர், புதன்கிழமை காலை சுகாதாரத்துறை தரப்பில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, அப்போது அவர்களிடம் அனைத்தையும் கூறினோம்.
அதன்பின்னர், கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்கள் எங்கள் குடியிருப்புக்கு வந்து, உடலை அடக்கத்திற்கு எடுத்துச்சென்றனர் என்று அவர் கூறினார்.