மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
New Delhi: கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சிட் பண்டு ஊழலில் குற்றவாளியாக இருக்க வாய்ப்பிருப்பதாக சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது. அதற்கு உச்ச நீதிமன்றம், ‘குற்றச்சாட்டிற்கான ஆதாரம் உள்ளதா?' என்று கேட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நேற்று விசாரணைக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது செய்தனர். சிபிஐ விசாரணையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு தரப்பு, மேற்கு வங்க அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ‘சிபிஐ அமைப்பின் கூடுதல் இயக்குநர், அவரது அலுவலகத்திலேயே நேற்று அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இது மிகவும் அசாதாரண சூழலாக உள்ளது. இதை நிரூபிக்க இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்' என்றார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம், ‘கொல்கத்தா போலீஸ் தரப்பு ஆதாரங்களை அழித்துள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா. அப்படி நிரூபித்தால், இந்த விவகாரத்தில் கொல்கத்தா போலீஸுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றது. இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இது குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் அவர் ஆஜராகததால் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போதுதான் கைது, தர்ணா போராட்டங்கள் நடந்தன.