This Article is From Aug 28, 2020

செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

இதன்படி உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும் காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்றும் அடுத்தகட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று காரணமாக கடந் மே மாதத்தில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது
  • பின்னர் மாதவரம், திருமாழிசை பகுதிகளில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது
  • காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்று திறக்கப்படுகின்றது

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக கடந் மே மாத தொடக்கத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. பின்னர் மாதவரம் மற்றும் திருமாழிசை பகுதிகளில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் கடுமையான வியாபார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கத்தினர் தொடர்ச்சியாக கூறி வந்திருந்தனர். இந்நிலையில், இன்று கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் சீரமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடிகளை திறப்பது குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனையை இன்று மாலை மேற்கொண்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கட்டமாக அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும் காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்றும் அடுத்தகட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கோயம்பேடு சந்தைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கிருமிநாசினியும் வெப்பநிலை பரிசோதனைக் கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.