This Article is From Aug 08, 2020

கேரளாவில் 190 பேருடன் விபத்துக்கு உள்ளான விமானம்; இரு பைலட்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. 

துபாயிலிருந்து கேரளாவுக்கு 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ரன்வே பகுதியிலிருந்து வழக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது.

New Delhi/Thiruvananthapuram:

துபாயிலிருந்து கேரளாவுக்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ரன்வே பகுதியிலிருந்து வழக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

IX 1344 என்ற எண் கொண்ட அந்த விமானத்தின் இரு விமானிகளும், உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியை ஏர் இந்தியா நிறுவனம், ‘வந்தே பாரத்' என்னும் பெயரில் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. 

விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட டிவி சேனல்களின் காணொலிக் காட்சிகளைப் பார்க்கும்போது, விமானம் இரண்டாக பிளந்துள்ளது தெரிகிறது. 

கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. 

‘கோழிக்கோடு விமான நிலையம், நாட்டில் உள்ள பிரதான விமான நிலையங்களில் ஒன்று. வெளிநாடுகளிலிருந்து இந்த விமான நிலையத்திற்கு அதிக விமானங்கள் வரும்' என்று NDTV-யிடம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ‘கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து குறித்து அறிந்து கவலையடைந்துள்ளேன். தேசிய பேரிடர் மீட்புப் படையினரை, விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்' என ட்வீட்டியுள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன், “காரிபூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து, காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரை விரைந்து பணி செய்யுமாறு கூறியுள்ளேன். மேலும் மீட்புக்கும் மருத்து உதவிக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

கேரளாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மேலும் சுமார் 50 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 


 

.