பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும்?
பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும்? ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அவர் சிறந்த ஆன்மிகவாதி. அவர் தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்; இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை மிகவும் பாராட்டி ரஜினிகாந்த் பேசியதால், அவருடைய பேச்சு அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டதை மிக நல்லமுறையில் அமித்ஷா செய்திருக்கிறார் என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ரஜினிகாந்திடம் இருந்து இதுபோன்ற கருத்தினை எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த கருத்தை படித்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்தேன். ரஜினிகாந்த் இயல்பிலேயே மிகவும் நல்ல மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். ஆன்மிகத்தின் மீது நாட்டம் கொண்டவர். எனவே, அவர் அப்படி சொல்லியிருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் ஆன்மிக உணர்வு என்பது மத உணர்வு என தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. அநீதியை கண்டு சிலிர்த்து எழுகிற நமது கதா நாயகன் பாட்ஷா (ரஜினிகாந்த்) காஷ்மீரத்திற்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித்ஷாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறரா?.
மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். மோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். ரஜினிகாந்த் தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும். திரும்பவும் சரியாக படியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.