This Article is From Apr 06, 2019

கிருஷ்ணரை பற்றி கி.வீரமணி பேசியது தவறு: மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணரை பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கிருஷ்ணரை பற்றி கி.வீரமணி பேசியது தவறு: மு.க.ஸ்டாலின்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோடு இந்துக் கடவுள் கிருஷ்ணரை ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பாஜகவினர், இந்து முன்னணியினர் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.

இந்நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மேற்கொண்ட பேட்டியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சல்ல. அது திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலகமான பெரியார் திடலில் அவர் பேசியுள்ளார்.

அதுவும் அவர் கொச்சைப்படுத்தி பேச வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசவில்லை. சில உதாரணங்கள் சொல்லி பேசியுள்ளார். ஆனால், அதனை இன்று சில ஊடகங்கள், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில் இதனை திட்டமிட்டு தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் தவறாக பரப்பி வருகின்றன.

அது உண்மையல்ல, உண்மையாக இருந்தால், தவறு என்று தான் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். திமுகவை பொறுத்தவரையில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே அண்ணாவின் கொள்கை. அதேபோல், கலைஞரும் பராசக்தி திரைப்படத்தில் மிகத்தெளிவாக ஒரு இடத்தில் வசனம் வைத்திருப்பார்.

'கோவில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல, கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக்கூடாது' என்பது தான் கொள்கை என்று தெளிவாக கூறியிருக்கிறார். அந்த அடிப்படையிலே, இன்றும் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவில், 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர். எனது மனைவியும் கடவுள் நம்பிக்கை உடையவர் தான் என்று அவர் கூறியுள்ளார்.

.