தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் மட்டும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹைலைட்ஸ்
- பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியது!
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி
- இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,293 பேருக்கு பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,293 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாகப் பாதிப்பு எண்ணிக்கையானது, 37,336ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, கொரோனா பாதிப்பால் இதுவரை 1,218 பேர் உயிரிழந்த நிலையில், 9951 பேர் கொரோனா பிடியிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1312 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு அளவுகள் அடிப்படையில், சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் மட்டும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில் பச்சை மண்டலம் அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவர், ஆந்திர மாநிலத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவருடன் சென்ற 3 பேர் மட்டும் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பச்சை மண்டலத்திலிருந்த கிருஷ்ணகிரி தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது.