நடிகர் விஜய்யை தற்கொலைக்கு சமமான விஷயத்தை செய்ய அழகிரி தூண்டுகிறார் - பொன்.ராதாகிருஷ்ணன்
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார வரவேற்போம் என கே.எஸ்.அழகிரி கூறியதை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் பேசிய அழகிரி, நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு ரஜினிக்கு வருமான வரிச்சலுகை குறித்து பேசிய அழகிரி விஜய்க்கு ஆதரவாக பேசினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரியிடம் கட்சியில் இணைய நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரஜினிக்கு சலுகை வழங்கியதை போல், விஜய்க்கு 24 மணி நேர அவகாசம் கூட வருமான வரித்துறை வழங்காது ஏன்? விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கவில்லை என தெரிவித்தார்.
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போதும், விஜய்க்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். அப்போது, நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவது உள்நோக்கம் உடையது எனவும், இந்த மிரட்டலுக்கெல்லாம் நடிகர் விஜய் பயந்துவிடுவார் என பாஜக பகல் கனவு காண்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று அந்த கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். அவருக்கு நடிகர் விஜய் மீது ஏதோ கோபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நடிகர் விஜய்யை தற்கொலைக்கு சமமான விஷயத்தை செய்ய அழகிரி தூண்டுகிறார் என்று அவர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.