This Article is From Aug 14, 2020

“அதிருப்திக்கு யார் காரணம்..?”- திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வம் பேட்டி

"திமுக, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதயநிதியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது"

Advertisement
தமிழ்நாடு Written by

"என்னுடைய பிரச்னையைப் பொறுத்தவரை, அதற்கு முழுக் காரணமும் உதயநிதிதான்”

Highlights

  • ஆயிரம் விளக்குத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் கு.க.செல்வம்
  • திமுகவிலிருந்து நேற்று அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்
  • செல்வம், பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது

திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கு.க.செல்வம், கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இப்படி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் கு.க.செல்வம், “என் மீது சில நாட்களுக்கு முன்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அதற்கு அடுத்த நாளே பதில் அளித்தேன். அதைப் பற்றி திமுக இதுவரை வாய் திறக்கவில்லை. அதே நேரத்தில், இப்போது நிரந்தரமாக நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

திமுக, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதயநிதியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்சியின் பல மூத்தவர்கள் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வெளியே வருவார்கள். என்னுடனும் நிறைய எம்எல்ஏ, எம்பிக்கள் தொடர்பில்தான் உள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், திமுகவிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள். என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை. என்னுடைய பிரச்னையைப் பொறுத்தவரை, அதற்கு முழுக் காரணமும் உதயநிதிதான்” என்று அதிரடியாக பேசினார். 

Advertisement

தொடர்ந்து பாஜகவில் இணைவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “தேர்தல் வரும் சமயத்தில் அதைப்பற்றி யோசிப்பேன். இப்போதைக்கு நான் எந்தக் கட்சியில் சேர்வது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. சட்டமன்றத்தில் நான் கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் எனக்கு யார் ஆயிரம் விலக்கு தொகுதியில் சீட் கொடுக்கிறார்களோ, அவர்கள் சார்பில் போட்டியிடுவேன். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது” என முடித்துக் கொண்டார். 

சில நாட்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத விதமாக டெல்லிக்குச் சென்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தார் கு.க.செல்வம். கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த இந்த சந்திப்புக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விளக்கம் கேட்டது திமுக. தொடர்ந்து நேற்று, அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளது. கு.க.செல்வம் விரைவில் பாஜவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. 

Advertisement


 

Advertisement