New Delhi: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதிமுதல் 21-ம் தேதிக்குள் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 48 வயதாகும் இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின்போது தூக்கு தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தூதரக நடவடிக்கை, சர்வதேச அழுத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டுள்ளது. இந்த நிலையில்தான் குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலூசிஸ்தான் பகுதியில் கடந்த 2016 மார்ச் மாதத்தின்போது குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார் என பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனை மறுத்துள்ள மத்திய அரசு ஈரானில் பிஸ்னஸ் செய்து கொண்டிருந்த ஜாதவை பாகிஸ்தான் அரசு கடத்திச் சென்று அவர் மீது பொய்யான புகார் கூறி, தூக்கு தண்டனை விதித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜாதவ் ஓர் முன்னாள் கடற்படை அதிகாரியாவார். இந்தியா முறையிட்டதை தொடர்ந்து அவரது தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.