2017 ஏப்ரலில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
New Delhi: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தான் உண்மையை ஒத்துக்கொள்ளும்படி பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளனர். இந்த தகவலை அவரை சந்தித்த பின்னர் இந்திய அதிகாரி தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தான் அரசு குல்பூஷன் ஜாதவை கைது செய்து வைத்திருந்தது. அவருக்கு கடந்த 2017 ஏப்ரலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியாக குல்பூஷனின் மரண தண்டனை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரை மீட்டு இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் இடைவிடாத முயற்சிக்கு பின்னர் இன்று அவரை வெளியுறவுத்துறை அதிகாரி கவுரவ் அலுவாலியா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 2 மணிநேரமாக இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து இந்திய அதிகாரியிடம் குல்பூஷன் விவரித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு எதிராக சதிச் செயலில் இறங்கியதாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குல்பூஷனுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்' என்று தெரிவித்தார்.
குல்பூஷன் ஜாதவ் ஒருஇந்திய உளவுத்துறை அதிகாரி என்றும், அவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் அந்த நாடு குற்றம்சாட்டி வருகிறது. அவருக்கு கடந்த 2017 ஏப்ரலில் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.