உடுமலைப்பேட்டை அருகே உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் சின்னதம்பி யானையானது தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டுள்ள நிலையில் அங்குள்ள கரும்புகளை சாப்பிட்டும், தண்ணீரில் விளையாடியும் பொழுதை கழித்து வருகிறது.
கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த சில தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் எனும் நிலை எழுந்தது. இதனை பலரும் கண்டித்தனர். இதனால் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது.
சின்னதம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீமும், மாரியப்பனும் சின்னதம்பி சுற்றித்திரியும் இடத்தின் அருகே நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சின்னதம்பி, கும்கி கலீம் அருகே வந்துள்ளது. அப்போது, கும்கி கலீம் சின்னதம்பியை லேசாக தாக்கியது. சிறிது நேரத்தில் சின்னதம்பி, கும்கி கலீமுடன் நட்பை ஏற்படுத்தியது. இதனால், இரண்டு நாட்களாக கலீமும், சின்னதம்பியும் நெருங்கிய நண்பர்களாக மாறி கொஞ்சி விளையாடி வந்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைகள் திரும்ப அழைத்து செல்லப்பட்டன.
இந்நிலையில், நான்கு நாட்கள் கழித்து தற்போது மீண்டும் கும்கி யாணைகளான கலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு யானைகளும் அழைத்து வரப்பட்டன. அப்போது, கரும்பு காட்டிற்குள் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பியை விரட்டுவதற்கு இரு யானைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
அப்போது வெளியே வந்த சின்னதம்பி யானையானது இரண்டு யானைகளுக்கும் எதிரே கோபமாக நின்றது. இதையடுத்து கரும்பு காட்டிற்குள் மீண்டும் கும்கி யானை சென்றது. கோபமாக இருந்த சின்னத்தம்பி யானையை பார்த்து பயந்த கும்கி யானைகள் இரண்டும் எதிர்திசையை பார்த்து ஓடிசென்றது. இதனால், சின்னதம்பியை வனத்திற்குள் அனுப்பம் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிவதால் வனத்துறையினர் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.