திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, அவரை அந்தப் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை, கண்ணாந்தம் பூண்டியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார் குமார் தாக்கூர். அவர் அதற்கு முன்னர் பெங்களூருவில் இருந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அங்கு தாக்கூர் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு போஸ்கோ வழக்கு பதியப்பட்டிருந்தது. இன்னும் அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தாக்கூருக்கு திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தாக்கூர் மீது நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து, பள்ளி வட்டாரத்தில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தாக்கூரை தலைமை ஆசிரியர் பணியிலிருந்து நீக்குமாறு போராட்டம் செய்துள்ளனர்.
இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தாக்கூரை அவரது பதவியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)