அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
ஹைலைட்ஸ்
- கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து பாஜக தமிழக தலைவர் பதவி காலியாக உள்ளது
- மக்களுக்கு அதிகம் பரிட்சயம் ஆகாத எல். முருகன் தலைவராக நியமனம்
- நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்கிறார் பாஜக தமிழக தலைவர் எல். முருகன்
பாஜகவின் தமிழக தலைவராகத் தேசிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துணைத் தலைவர் எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு தமிழகத்தில் பாஜக தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தலைவர் குறித்த அறிவிப்பை பாஜக தலைமையகம் அறிவித்துள்ளது.
எல். முருகன் 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது தேசிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துணைத் தலைவராக முருகன் செயல்பட்டு வருகிறார்.
பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதற்காகப் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோருக்கு எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழிசை சவுந்தர ராஜனுக்குப் பின்னர், யார் தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்குப் பின்னர் எல். முருகனை தமிழக பாஜக தலைவராகத் தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.