This Article is From Jun 16, 2020

லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த சண்டையில் தமிழக வீரர் பழனி வீரமரணம்!!

லடாக் எல்லையில் இந்தியா - சீனா  ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய தரப்பில், ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த சண்டையில் தமிழக வீரர் பழனி வீரமரணம்!!

வீரர் பழனியின் மரணம் அவரது சொந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • லடாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே நேற்றிரவு பலத்த மோதல்
  • இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு
  • இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம் அடைந்தார்

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த சண்டையில் இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீர மரணம் அடைந்துள்ளார்.  அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு  அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

லடாக் எல்லையில் இந்தியா - சீனா  ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய தரப்பில், ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியும் வீர மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அவது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தமிழக  முதல்வர் தனது இரங்கல் பதிவில், 'லடாக் எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!' என்று தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், 'லடாக்கில்  நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!' என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் எதிரிகளுடனான மோதலில்  இராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரத்திருமகன் பழனிக்கு எமது வீரவணக்கம்!' என்று கூறியுள்ளார்.  

இதேபோன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

.