Leh/ New Delhi: இந்திய மற்றும் சீன எல்லையான உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும், ராணுவ வீர்கள் அனைத்திற்கும் தயாராக உள்ளனர் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே தற்போது கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சீனா, இந்திய எல்லையில் அத்து மீறியதாகவும், இந்திய ராணுவம் அதனை முறியடித்ததாகவும், ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இதன் தொடர்ச்சியாக, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் இதனை எதிர்கொள்ள ஜவான்களின் மன உறுதியும் அதிகமாக உள்ளது, மேலும் அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்றும் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே தற்போது தெரிவித்துள்ளார்.
“நேற்று லேவை அடைந்தபின் நிலைமையை நான் மறுபரிசீலனை செய்தேன். ஜவான்களின் மன உறுதியும் அதிகமாக உள்ளது. அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். நமது வீரர்கள், இராணுவத்தை மட்டுமல்ல, முழு நாட்டையும் பெருமைப்படுத்துவார்கள். நிலைமை பதட்டமாக உள்ள நிலையிலும் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றோம். முன்னெச்சரிக்கை சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று நாரவனே தெரிவித்துள்ளார்.