கமல்ஹாசன் லடாக் வன்முறை குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்(கோப்பு)
New Delhi: சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதியில் நடைபெற்ற இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 76 பேர் படுகாயமடைந்துள்ளதோடு 10 ராணுவ வீரர்களை சீனா ராணுவம் தனது காவலில் பிடித்து வைத்திருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சீனா, இந்திய ராணுவ வீரர்களை விடுவித்தது.
இந்த நிகழ்வையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தினை நடத்தியிருந்தார். இதில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பல அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் மக்களை உணர்ச்சிப்பூர்வமாக கையாள முயற்சிப்பதை தவிர்க்குமாறு மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக பிரதமர், “இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழையவில்லை எனவும் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்.“ எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன், “எல்லை விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிர வேண்டும்.“ என்று கூறியுள்ளார்.
மேலும், “எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், "கேள்விகளை தேசவிரோதமாக கருத முடியாது. கேள்விகளைக் கேட்கும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை, நாங்கள் உண்மையைக் கேட்கும் வரை தொடர்ந்து கேட்போம்" என்றும் கூறியுள்ளார்