ஆட்டோ மொபைல் துறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Chennai: பொருளாதார மந்த நிலை (Economic Slow Down) காரணமாக ஆட்டோ மொபைல் துறை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேக்கத்தை சந்தித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் 70 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாகனங்கள் விற்பனை ஆகாத நிலையில் அவ்வப்போது பணி நிறுத்தங்களை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இருப்பினும், எந்த நேரத்திலும் சரிவில் இருந்து மீள்வோம் என்ற நம்பிக்கையில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உள்ளன.
இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைதான் உலகில் 4-வது பெரும் வேலை வாய்ப்பு துறையாக கருதப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3.50 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.
இந்நிலையில் பல்வேறு துறைகளை பாதித்திருக்கும் பொருளாதார மந்த நிலை ஆட்டோ மொபைல் துறையிலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 70 ஆயிரம்பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அம்பத்தூரில்தான் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகம் செயல்படுகின்றன. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த
சகாய மேரிக்கு வேலை பறிபோயுள்ளது.
விதவையான அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வதென வழி தெரியாமல் தான் வைத்திருந்த சிறிதளவு தங்கத்தை அடகு கடையில் அடமானம் வைத்துள்ளார். ''கடன் வாங்கிய பணத்தில் சாப்பிடலாமா, கடனை எப்படி திருப்பி கட்டுவது'' எனக்கூறும் அவர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
இதேபோன்று பல தொழிலாளர்கள் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.