Lalithaa Jewellery theft - தப்பியோடிய நபர் திருவாரூர் ஒட்டன் ரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (28) என்றும், அவர் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருச்சியில் (Tiruchy) நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய கொள்ளையன், இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவாரூரில் பிடிப்பட்டார். தற்போது அவர் கொடுத்திருக்கும் பரபரப்பு வாக்குமூலத்தினால், காவல் துறையின் விசாரணை வேகமெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
திருச்சியில் (Tiruchy) உள்ள லலிதா ஜுவல்லரி (Lalithaa Jewellery) ஷோரூமில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் (Theft) சென்றுள்ளது ஒரு கும்பல். சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை (Masks) அணிந்து திருடியுள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 13 கோடி ரூபாயாகும். ஷோரூமுக்கு 6 இரவு நேரக் காவாளிகள் இருந்தபோதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கடைக்குள் அவர்கள் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் மடக்கினர். அதில் ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகளை போலீசார் சோதனையிட்டபோது அதில் நகைகள் சில இருந்தன.
அந்த நகைகளின் பார்கோடுகளை சோதனையிட்ட போது, லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் முத்திரைகள் இருந்தன. இதனால் அவர்கள் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபரிடம் மொத்தம் 5 கிலோ எடை அளவில் நகைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என போலீஸார் கூறினர். தப்பியோடிய நபர் திருவாரூர் ஒட்டன் ரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (28) என்றும், அவர் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சி போலீஸார் திருவாரூர் விரைந்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர் விசாரணையின்போது, திருடப்பட்ட மீதமிருக்கும் நகைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிறரும் தஞ்சாவூரில் இருப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸ், தஞ்சை விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.