உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்யப்படும் மொழிகளில் தமிழும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
New Delhi: தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மக்களாலும் அவர்களது தாய் மொழியில் படிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும் நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. இதன்படி இந்தி, தெலுங்கு, அசாமி, மராத்தி, கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மொழிகளில் தமிழ் இல்லாமல் இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த விவகாரத்திற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய மொழியில் தீர்ப்பை மொழிமாற்றம் செய்து வெளியிடும் முடிவினை வரவேற்கிறேன். இது இந்திய நீதிபரிபாலனச் சரித்திரத்தில் முக்கிய மைல் கல். தமிழ் மொழியையும் அந்த பட்டியிலில் சேர்க்க வேண்டும் ' என்று வலியுறுத்தியிருந்தார்.
இதேபோன்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தல்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழ் மொழியிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.