This Article is From Apr 01, 2019

வேலூரில் கட்டுக்கட்டாக சிக்கியப் பணம்; தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பா!?

வேலூரில் உள்ள ஒரு சிமென்ட் குடோன் ஒன்றில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டு, ‘வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா?’ என்று வினா எழுப்பப்பட்டது

வேலூரில் உள்ள ஒரு சிமென்ட் குடோன் ஒன்றில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலூரில் நடக்கவுள்ள தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அப்போது, துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றபடவில்லை என்று கூறப்படுகிறது. 

சோதனைக்குப் பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘சோதனை செய்வதற்கு இது காலம் அல்ல. இந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன. வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது, அதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்கே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது' என்று உஷ்ணமானார். 

இந்நிலையில் அங்குள்ள சிமென்ட் குடோனில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டு, ‘வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா?' என்று வினா எழுப்பப்பட்டது. அதற்கு சாஹு, ‘அது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும்' என்று முடித்துக் கொண்டார்.

.