This Article is From Dec 27, 2019

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!!

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாடுகளும் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!!

டெல்லி ஜாமா மசூதியில் நூற்றுக்கணக்கானோர் கூடி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

New Delhi:

டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தணிந்த நிலையில், இன்றைக்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஜாமா மசூதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது. அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடி, குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாடுகளும் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜாமா மசூதிய போராட்டத்தில் டெல்லியின் முன்னாள் எம்.எல்.ஏ. சொயிப் இக்பால், காங்கிரஸ் தலைவர் ஆல்கா லம்பா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தின்போது பேசிய, ஆல்கா லம்பா, 'நாட்டில் வேலை வாய்ப்பின்மைதான் உண்மையான பிரச்னை. ஆனால் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பின்போது ஏற்பட்டதைப் போன்று மக்களை என்.ஆர்.சி.க்காக வரிசையில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். ' என்று பேசினார்.

உத்தர பிரதேஷ் பவன், சீலாம்பூர், ஜாப்ராபாத் உள்ளிட்ட டெல்லியின் பதற்றம் நிறைந்த இடங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த வாரம் ஜாமா மசூதி அருகே, பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கவில்லை. ஜாமா மசூதியில் தொடங்கி ஜந்தர் மந்தரில் போராட்டம் முடிவதாக இருந்தது. 

இந்த போராட்டம் மாலை நேரத்தின்போது வன்முறையாக மாறியது. இதில் 8 போலீசார் உள்பட மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். 

மதத்தின் அடிப்படையில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்தம் வகை செய்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமையை வழங்கும். 

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விரோதமானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

.