முதல்வரின் ஆலோசனைப்படி பணிக்கு திரும்ப அவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டமைப்பில் இருந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், மற்றவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதுதொடர்பாக இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, அரசு வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள மருத்துவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதே மருத்துவ பணி. மக்களுக்காக பணிக்கு திரும்பிய பணியாளர்களுக்கு மிக்க நன்றி. மருத்துவமனை என்பது போராட்டக்களம் அல்ல.
இன்று மாலைக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாலைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால் காலியிடங்களாக பணியிடங்கள் அறிவிக்கப்படும். மாலையிலிருந்து புது மருத்துவர்களை நியமிக்கும் பணி தொடங்கும் என்று முதலில் எச்சரித்திருந்தார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இதுவரை 2,160 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர், பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி.
கடலூர், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரத்தில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளனர். மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் தொடர்ந்து பணிக்கு திரும்பி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். முதல்வரின் ஆலோசனைப்படி பணிக்கு திரும்ப அவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்; புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்தார்.