This Article is From Jul 26, 2019

வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டம் வேண்டும்: அரசியல் கட்சிகள்

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by (with inputs from IANS)

தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும்

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலை வழங்க சட்டம் வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. அதாவது, அரசு தனியார் பங்களிப்பில் உருவாகும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திட்டங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 75% ஆந்திரப் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

அந்த சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்துக்கு தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் கிடைக்கவில்லையென்றால் அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை அளிக்கவேண்டும். அதனால், தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் இல்லை என்று வாதம் செய்ய முடியாது. இந்த சட்டத்தின் மூலம், இந்தியாவிலேயே 75% வேலை வாய்ப்புகள் மாநில மக்களுக்கு உறுதி செய்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது. 

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 

Advertisement

ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பாமக இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.

Advertisement

ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப்பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுகவின் செய்திதொடர்பாளர் சரவணன் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மாநில மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகளில் ஒருவித இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். வேலைகள் ஒதுக்கப்படுவதிலும் ஒரு நல்ல சமநிலை இருக்க வேண்டும். நம்மால், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு வரக்கூடாது என்று கூற இயலாது என்று அவர் கூறினார். 

Advertisement

திறமையான உழைப்பு மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக தமிழகம் தொடர்ந்து முதலீடுகளைப் பெறும். தொடர்ந்து இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு அவர்களின் முதலீட்டில் பல்வேறு வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீடுகளில் கிடைக்கும் சலுகைகள் மூலம், அவர்கள் மலிவான திறமையற்ற தொழிலாளர்களை தேர்வு செய்வதில்லை என தமிழ்நாட்டின் முன்னாள் நிதி மற்றும் சட்ட அமைச்சரும், அதிமுகவின் மாநில அமைப்பு செயலாளருமான சி.பொன்னையான் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

Advertisement

வளர்ச்சியடையாத மாநிலங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தராதது குறித்து அம்மாநில மக்கள் கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும். இதனால், வளர்ச்சியடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு மக்கள் குடியேறும் நிலை உள்ளது என சரவணன் கூறினார்.

இத்தகைய நிலைமையை தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பிற மாநிலங்கள் சுரண்டக்கூடாது. அவரவர் மாநிலங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், அம்மாநில மக்கள் வெளிமாநிலங்களில் குடியேறுவதைத் தடுப்பதும் அந்த மாநில அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் வேலையாக இருக்க வேண்டும். 

Advertisement

"வேலை வாய்ப்பு இல்லாமல் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளனர். தமிழகத் தொழில்கள், வர்த்தகம் ஆகியவற்றில் பிற மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் நுழைவதன் மூலம் தமிழ்நாட்டின் ஏழை உடல் உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் நிலை உள்ளது. 

இதனை சரியான நேரத்தில் சரிபார்க்கப்படாவிட்டால், இந்த நிலைமை எதிர்மறையான எண்ணம் கொண்ட அரசியல் சக்திகளால் சுரண்டப்பட்டு மாநிலத்தில் அமைதியின்மை உருவாக்கக்கூடும் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் செயலாளர் சீனிவாசன் கூறும்போது, தமிழ்நாட்டில் உள்ளூர்வாசிகளுக்கான வேலைகள் தொடர்பான எந்தவொரு சட்டத்தின் வரம்பிலிருந்தும் ஹோட்டல் தொழிலுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று நம்புகிறோம். எனெனில், இங்குள்ள பல ஹோட்டல்களில் வடகிழக்கு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் டேபிள் கிளீனர்களாக வேலை செய்கிறார்கள்.

ஹோட்டல் துறையை பொறுத்தவரை சர்வர் மற்றும் அதற்கும் மேல் உள்ள நிலைகளுக்கு உள்ளூர் பணியாளர்கள் கிடைப்பார்கள். ஆனால், டேபிள் துடைப்பது, பாத்திரங்கள் மற்றும் பிறவற்றை சுத்தம் செய்வதற்கு, குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகமாக நாம் கொடுத்தாலும், மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் ஊழியர்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

Advertisement