Lawrence about Seeman - நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய லாரன்ஸ், சீமானுக்கு ஒரு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
Lawrence about Seeman - டிசம்பர் 12 ஆம் தேதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருந்திரளான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பி.வாசு, நடிகை மீனா, லாரன்ஸ் ராகவேந்திரா (Lawrence Raghavendra) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லாரன்ஸுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையில் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய லாரன்ஸ், சீமானுக்கு ஒரு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அது இரண்டு நாட்களாக தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
உரையின் தொடக்கத்தில் சீமானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைப் பற்றி பேசினார் லாரன்ஸ். “தமிழக அரசியலில் ஒருவர் இருக்கிறார். தமிழ்த்தாயின் மூத்தப் பிள்ளை, தான் மட்டுமே என்கிறார். அப்படியென்றால் நாங்களெல்லாம் அமெரிக்கா காரனுக்கா பிறந்தோம். யாரும் அரசியலுக்கு வரக்கூடாது. நான் மட்டுமே களத்தில் நிற்பேன். இது என் வீடு. எனக்குத்தான் எந்த இடத்தில் நட்டு, போல்டு வீக்காக இருக்கிறது எனத் தெரியும் என்கிறார். இது என்ன மாதிரியான மனநிலை. ஓட்டப் பந்தயம் நடக்கிறது என்றால், அனைவரையும் ஓடவிட்டு, அதில் யார் ஜெயிக்கிறாரோ அவன்தான் உண்மையான ஆண். யாருமே ஓடாத ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுவதை என்னவென்று சொல்வது,” என்று சீமானின் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாக பேசினார் லாரன்ஸ்.
ஆனால் ஒரு கட்டத்தில், “சீமான் அண்ணா…” என்று சொல்ல மொத்த அரங்கமே எதிர்ப்புக் குரல்களால் அதிர்ந்தது. அதைத் தொடர்ந்து லாரன்ஸ், “சரி பேசமாட்டேன்… அவரின் பெயரைச் சொல்லமாட்டேன்,” என்றார். பின்னர்தான் ரசிகர்களின் கோஷம் சற்றுத் தணிந்தது.
“அவருக்கு ஒரேயொரு கோரிக்கைதான். அரசியல் பேசுங்கள். அரசியல் ரீதியாக ஒருவரை விமர்சியுங்கள். ஆனால், தனி மனித தாக்குதல்களைத் தொடுக்கக் கூடாது. அவதூறு பேசக் கூடாது. நாகரீகமாக பேச வேண்டும். நாங்கள் தர்மத்தின் பக்கம் நின்று பேசுகிறோம். உங்கள் அதர்மத்தைக் கைவிட வேண்டும். என்னைப் பற்றி அசிங்கமாக பேசுகிறீர்கள். நான் காசிமேட்டில் பிறந்தவன். உங்களைவிட எனக்கு அசிங்கமாக பேசத் தெரியும். வேண்டாம்…” என்று முடித்துக் கொண்டார்.