Le Royal Meridien - இந்த மொத்த விஷயமும் 999 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கிறது என்பதே தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.
அன்லிமிடெட் உணவுகளை லிமிடெட் விலையில் கொடுப்பதால் உணவுப் பிரியர்களை அதிக அளவு ஈர்க்க முடியும் என்பதை சிறிய உணவகங்கள் மட்டுமல்ல, 5 நட்சத்திர விடுதியான Le Royal Meridien கூட புரிந்துவைத்திருக்கிறது. அப்படி ஒரு பஃபே வகை Food Bazar-க்கு சமீபத்தில் அழைப்பு வந்தது. வார இறுதியில் மட்டுமே நடக்கும் இந்த ‘உணவுத் திருவிழா'-வுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்.
வெள்ளிக் கிழமை, 7 மணி… மெல்லிசை ஒலித்துக் கொண்டிருந்த ஒரு புல்வெளியில் அடுக்கடுக்காக உணவுகள் தொகுக்கப்பட்டிருந்தன. சாட் ஐட்டம் முதல் ஃப்ரூட் சாலட் வரை, பிரியாணி முதல் பீட்சா வரை, ஆப்பம் முதல் இறால் தொக்கு வரை… எல்லாம் சுடச் சுட கேட்பதைப் பொறுத்து ஃப்ரெஷாக சமைத்துக் கொடுக்கப்பட்டன. பொதுவாக ஒரு உணவகத்தில் எந்த ஐட்டங்கள் ஸ்பெஷல் என்பதை முன்னரே கேட்டு, அதற்கு ஏற்றது போல மனதளவில் ஒரு மெனு கார்டு உருவாக்கிச் செல்வது என் வழக்கம். ஆனால், பஃபே போன்ற உணவுகளில் அதிக கவனம், கடல்சார் உணவுகளுக்குத்தான் கொடுப்பேன். ஆனால், ஃப்ரெஷாக சமைத்துக் கொடுத்தால், ஒரு உணவுக்கு மற்றது சலைத்ததாக இருக்காது. அப்போது எந்த உணவைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் வரும். அதைவிடச் சிக்கல், எந்த உணவு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என்பதை கண்டறிய முடியாது.
இருப்பினும் எல்லா உணவுகளையும் ஒரு கை பார்த்துவிட்டு (ஒரேயொரு கை மட்டுமே பார்த்துவிட்டு), டெசர்ட் பக்கம் வந்தேன். அங்கும் வகை வகையான ஐஸ்கிரீம், மெக்சிக்கன் டெசர்ட்ஸ், வட இந்திய டெசர்ட் என்று அமர்க்களப்படுத்தினார்கள். குறிப்பாக இளநீர் பாயசம்… பலே பலே.
இந்த ஃபுட் பஜாரின் மிகப் பெரிய ப்ளஸ் ஒன்று இருக்கிறது. என்னதான் வகை வகையான உணவுகளை மெனக்கெட்டு செய்து தந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் வெறுமனே சாப்பிடுவது மட்டும் சலிப்பைத்தான் தரும். அதை சரிகட்ட மேஜிக் ஷோ, லைவ் பெர்ஃபார்மென்ஸ் மூலம் இசை, ஃபேஷன் ஷோ என வெரைட்டி காட்டப்படுகிறது. இதனால், ஒரு பக்கம் நடக்கும் கேளிக்கைகளை ரசித்துக் கொண்டே மறுபக்கம் உணவை வகைதொகை இல்லாமல் உள்ளே அமுக்கலாம். இந்த மொத்த விஷயமும் 999 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கிறது என்பதே தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.
தென் சென்னையின் பாலிஷான அடையாளங்களில் ஒன்று Le Royal Meridien. அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த விடுதியில், உணவுத் திருவிழா ஒன்றில் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது என்றால், ஃபுட்டீஸ் அதை மிஸ் செய்யக் கூடாதுதானே..?