நீண்ட நாள் உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லி பாதிக்கப்பட்டிருந்தார்.
New Delhi: 'அருண் ஜெட்லி மறைவு நாட்டிற்கே பேரிழப்பு' என்று மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மதியம் 12:07 க்கு பிரிந்தது.
' பல ஆண்டுகளாக எனக்கு நெருக்கமாக இருந்த மிகச்சிறந்த நண்பர் அருண் ஜெட்லியை இழந்து விட்டேன். ஒவ்வொரு பிரச்னைகளைப் பற்றி அவர் அறிந்து வைத்திருக்கும் அறிவு பிரம்மிக்கத்தக்கது. அவர் நன்றாக வாழ்ந்தார். இனிமையான நினைவுகளை நம்மிடம் விட்டுச் சென்று, நம்மை விட்டு பிரிந்துள்ளார்.
பாஜகவுக்கும், அருண் ஜெட்லிக்கும் இருக்கும் உறவு பிரிக்க முடியாது. எமர்ஜென்ஸி காலத்தின்போது வீரம் மிக்க மாணவர் தலைவராக ஜனநாயகத்திற்கு அருண் ஜெட்லி குரல் கொடுத்தார்.' என்று பிரதமர் மோடி தனது இரங்கல்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அருண் ஜெட்லியின் மறைவு குறித்து ராஜ்நாத் சிங் விடுத்துள்ள இரங்கல் பதிவில், 'நாட்டுக்கா க மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளை அருண் ஜெட்லி வகித்திருக்கிறார். அவர் அரசுக்கும், கட்சிக்கும் மிகப்பெரும் சொத்து. ஒவ்வொரு நாளும் நாட்டில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆழமான புரிதலை அருண் ஜெட்லி கொண்டிருந்தார். அவரது ஞானம், திறமை அவருக்கு ஏராளமான நண்பர்களை தேடித் தந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சரியான திசையில் கொண்டு சென்றதற்காக அருண் ஜெட்லி எப்போதும் நினைவு கூறப்படுவார். ஒரு பேரிழப்பை பாஜக சந்தித்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 'உடல்நல பாதிப்பால் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருந்த அருண் ஜெட்லியின் மறைவை அறிந்து துயரம் கொண்டேன். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், அறிவார்ந்த வழக்கறிஞர், கட்சி வேறுபாடுகளை கடந்து பாராட்டப்பட்டவர் அருண் ஜெட்லி' என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது இரங்கல் பதிவில், 'அருண் ஜெட்லியின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு. சட்ட வல்லுனர், அனுபவம் மிக்க அரசியல் தலைவராக அவர் இருந்தார். அவரது நிர்வாகத்திறமையை பாராட்டுக்குறியது.' என்று குறிப்பிட்டுள்ளார்.